(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் சார்பில் வழக்குகளை நடத்தும் ஒரு சுயாதீன பொறிமுறையாக 'சுயாதீன அரசாங்க குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகம்' ஒன்றை நிறுவுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும்,தேவையான சந்தர்ப்பங்களில் தற்ப…

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் சார்பில் வழக்குகளை நடத்தும் ஒரு சுயாதீன பொறிமுறையாக 'சுயாதீன அரசாங்க குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகம்' ஒன்றை நிறுவுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும்,தேவையான சந்தர்ப்பங்களில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களுக்குத் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும், உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த  குழுவின் அறிக்கைக்கு அமைய வெகுவிரைவில்  சுயாதீன அரசாங்க குற்றவியல் அரசுதரப்பு அலுவலகம் நியமிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன  நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படும் தரப்பினர் தங்களது குறைகளை சமர்ப்பிக்கும் வகையில், 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கை பிரகடனத்தின் மூலம் 'விசேட பாராளுமன்ற  ஓம்பட்ஸ்மேன்' (குறைகேள் அதிகாரி) ஒருவரை நியமிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் கீழ், சட்டமா அதிபர் திணைக்களத்தை வலுப்படுத்துதல் என்ற மூலோபாய திசையின் கீழ் ஐந்து முக்கிய செயல்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. அதற்கமைய, தற்போதைய நிலையில் நீதித்துறையில் ஏற்படும் தாமதங்களை நீக்கும் ஒரு பொறிமுறையாக, அரசாங்கத்தின் சார்பில் வழக்குகளை நடத்தும் ஒரு சுயாதீன பொறிமுறையாக 'சுயாதீன அரசாங்க குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகம்' ஒன்றை நிறுவுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும்,தேவையான சந்தர்ப்பங்களில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களுக்குத் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும், உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் ஓம்பட்ஸ்மேன் ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளமை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படும் தரப்பினர் தங்களது குறைகளை சமர்ப்பிப்பதற்காகவே ஆகும். இருப்பினும், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகும். எனவே, ஒரு வாக்குறுதி தொடர்பான ஏதேனும் ஒரு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் போது, அது மேற்கொள்ளப்படும் முறையைப் பொறுத்து, ஏனைய வாக்குறுதிகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் தேவைகள் மற்றும் பணிகளில் தாக்கம் ஏற்படலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், அவ்வாறு தாக்கத்திற்குள்ளாகும், ஆனால் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அதன் தேவைப்பாடு குறித்து மீண்டும் ஒரு மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரசாங்கத்தின் பிரதான குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவது எந்தக் கோணத்தில் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்ட பின்னர், அதனை நடைமுறைப்படுத்தும் போது இக்கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஓம்பட்ஸ்மேன் ஒருவரை நியமிப்பதன் தேவைப்பாடு குறித்தும், ஓம்பட்ஸ்மேனின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் குறித்தும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதால், இதுவரை அந்த நியமனத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகத்தை நிறுவும் போது சட்டமா அதிபரின் பங்களிப்பு என்ன, குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகத்தின் அதிகாரங்கள் என்ன என்பதுவே எதிர்பார்க்கப்படுகிறது. ஓம்பட்ஸ்மேன் தொடர்பான விடயம், தற்போதைய சட்டமா அதிபரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனைத் தெரிவிப்பதாகும். ஆனால், குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகத்தின் அதிகாரங்களையும் சட்டமா அதிபரின் அதிகாரங்களையும் பிரித்தறியாமல், இந்தத் தருணத்தில் ஓம்பட்ஸ்மேனை எவ்வாறு நிலைநிறுத்துவது என்று எம்மால் சிந்திக்க முடியாதுள்ளது. அதனால்தான், குற்றவியல் அரசுத்தரப்பு அலுவலகத்தின் அதிகாரப் பகிர்வு தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே,ஓம்பட்ஸ்மேனை அந்த முறையின் கீழ் நிலைநிறுத்த வேண்டியுள்ளது. நாம் அது குறித்து வேலை செய்து வருகிறோம். இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. ஓம்பட்ஸ்மேனை நியமிக்காததற்கான காரணம் இதுவேயாகும் என்றார்.