இரத்மலானையில் கட்டப்பட்டு வரும் புதிய தொடருந்து பணிமனைக்காக, இலங்கை தொடருந்து பின்லாந்திலிருந்து ஐந்து கிரேன் பொறிகள் கட்டமைப்புகளை (crane systems) இறக்குமதி செய்துள்ளது. இலங்கையின் தொடருந்து பராமரிப்புப் பணிகளை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த இறக்குமதி மேற்கொள்ளப…
இரத்மலானையில் கட்டப்பட்டு வரும் புதிய தொடருந்து பணிமனைக்காக, இலங்கை தொடருந்து பின்லாந்திலிருந்து ஐந்து கிரேன் பொறிகள் கட்டமைப்புகளை (crane systems) இறக்குமதி செய்துள்ளது.
இலங்கையின் தொடருந்து பராமரிப்புப் பணிகளை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கொழும்பு புறநகர் தொடருந்து திட்டத்தின் கீழ் இந்த கிரேன் கட்டமைப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.புதிய தொடருந்து பணிமனை இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ள தகவல்களின் பிரகாரம், இறக்குமதி செய்யப்பட்ட இந்த உபகரணங்களின் மதிப்பு பதின்மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 342.73 அமெரிக்க டொலர்கள் ஆகும். இவை இரத்மலானை தொடருந்து பணிமனையில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய பணிமனையில் (Ratmalana railway yard) நிறுவப்படும். இந்த சரக்கு அனுப்பீட்டில், தலா 50 தொன் தூக்கும் திறன் கொண்ட, மின்சாரத்தால் இயக்கப்படும் இரண்டு இரட்டை-கிரிடர் மேல்நிலை நகரும் கிரேன்கள், என்ஜின்கள் மற்றும் பெட்டிகளைத் தூக்குவதற்கான இரண்டு 15-தொன் கிரேன்கள், மற்றும் ஒரு 10-தொன் கிரேன் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
கிரேன் அமைப்புகள் நிறுவப்பட்டவுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய பணிமனையில் என்ஜின் பராமரிப்புப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய உபகரணமானது, தொடர்வண்டி மற்றும் பெட்டிப் பராமரிப்புக்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

