அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஒளிபரப்புக் கோபுர உச்சியில் அனுமதியின்றி ஏறி திருமண முன்மொழிவு செய்ததாகக் கூறப்படும் ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த சாகச ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, எஞ்சலா நிகோலாவ் (Angela Ni…
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஒளிபரப்புக் கோபுர உச்சியில் அனுமதியின்றி ஏறி திருமண முன்மொழிவு செய்ததாகக் கூறப்படும் ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த சாகச ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோர் கருப்பு நிற ஆடைகளை அணிந்து, சுமார் 1,454 அடி உயரமுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் உச்சியை பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி அடைந்துள்ளனர்.
இந்த சாகசப் பயணத்தை அவர்கள் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியதுடன், “அதிகாரத்தின் மீதான காதலை விட, காதலின் அதிகாரம் மேலோங்கும்போது உலகம் அமைதியை அறியும்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கொடியொன்றையும் அங்கு பறக்கவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோடி, பாதுகாப்பு கயிறுகள் அல்லது பிற பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உயரமான கட்டிடங்களில் ஏறும் சாகசங்களுக்காக ஏற்கனவே அறியப்பட்டவர்கள். முன்னதாக மலேசியாவின் 2,227 அடி உயரமுள்ள மெர்டேகா 118 கோபுரத்தில் மேற்கொண்ட சாகசம் தொடர்பான ஆவணப்படத்திலும் அவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஒளிபரப்புக் கோபுரம் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்கு அலைவரிசைகளை வழங்கும் முக்கிய கட்டமைப்பாக இருப்பதால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதன் ஒளிபரப்பு வசதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் பாயும் ஒளிபரப்புக் கருவிகளுக்கு அருகில் ஏறியதால், மின்காந்த அலைகளின் தாக்கம் உள்ளிட்ட கடுமையான ஆபத்துகளுக்கு அவர்கள் உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, முறையற்ற அத்துமீறல், கவனக்குறைவாக ஆபத்தை ஏற்படுத்தல் மற்றும் ஒழுங்கீனமான நடத்தை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

