தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்து செய்து, தன்னை விடுதலை செய்யுமாறு கோரி நான்கு மேன்முறையீட்டு மனுக்களை முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்ட…
தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்து செய்து, தன்னை விடுதலை செய்யுமாறு கோரி நான்கு மேன்முறையீட்டு மனுக்களை முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கு
2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, கட்டாய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்களை குத்தகைக்கு எடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக, சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது.
விசாரணை நடவடிக்கைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
தொடர்ந்து அவருக்கு, ஒவ்வொரு வழக்கிற்கும் தலா நான்கு வருடங்கள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் நீதிமன்றம் 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதித்தது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்களின் மூலம், மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அபராதத்தை இரத்து செய்யுமாறு பிரதி அமைச்சர் சரண குணவர்தன கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

