மாணவர்களின் முழுமையான திறனை வெளிக்கொணரும் வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவை அவர்களுக்கு வழங்குவதற்கும், கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகப் படைப்பாற்றலையும் விமர்சன ரீதியான சிந்தனையையும் வளர்ப்பதற்கும் அரசாங்கம் உறுதியுடன் உள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள…
மாணவர்களின் முழுமையான திறனை வெளிக்கொணரும் வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவை அவர்களுக்கு வழங்குவதற்கும், கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகப் படைப்பாற்றலையும் விமர்சன ரீதியான சிந்தனையையும் வளர்ப்பதற்கும் அரசாங்கம் உறுதியுடன் உள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பலாங்கொடை விஜயாலோக மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு மாணவர்களின் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அருமாசிய' (Arumasiya) கண்காட்சியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
பாடப்புத்தகக் கல்விக்கு அப்பால் மாணவர்கள் வெளிப்படுத்திய தனித்துவமான திறமைகளைப் பாராட்டிய பிரதமர், கல்லூரிக்கான புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அரசாங்கம் முன்னெடுத்துள்ள கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விடயங்களை விளக்கினார்.
பாரம்பரியப் பரீட்சை மையக் கல்வி முறைக்குப் பதிலாக, நடைமுறை மற்றும் திறன் சார்ந்த கல்வி முறையை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, இந்த கல்விச் சீர்திருத்தங்களை 2027-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
பாடசாலை கல்வியை முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும், அவர்களது திறமைக்கு ஏற்றவாறும் நவீன தொழிலாளர் சந்தையின் தேவைக்கு ஏற்பவும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன், தொழிற்கல்விக்கும் பல்கலைக்கழகக் கல்விக்கு இணையான அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைப் பிரதமர் பாராட்டினார்.
குறித்த நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பலாங்கொடை மாநகர முதல்வர் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

