Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற 05 ஆட்கொலை சம்பவங்கள்…

Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற 05 ஆட்கொலை சம்பவங்கள் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.2008ஆம் ஆண்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்கொலை சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான விடயங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.2008 ஜனவரி 09ஆம் திகதி முருகன் கோவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இருவர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை கண்ணன்குடா பகுதியை சேர்ந்த அழகுதுரை தர்மலிங்கம் என்பவர் அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலே விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்த சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில், ஆட்கொலை சம்பவங்களின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.