கத்தோலிக்க திருச்சபையில் ஆயர்கள் நியமிக்கப்படும் நடைமுறை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துப் பதிவொன்றில், ஆயர் நியமனம் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நடைபெறும் செயலாக அல்ல, மாறாக திருச்சபையின் போதனை மற்றும…
கத்தோலிக்க திருச்சபையில் ஆயர்கள் நியமிக்கப்படும் நடைமுறை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துப் பதிவொன்றில், ஆயர் நியமனம் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நடைபெறும் செயலாக அல்ல, மாறாக திருச்சபையின் போதனை மற்றும் திருஅவைச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் புனித செயலாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அந்தப் பதிவில், கத்தோலிக்க திருச்சபை இயேசு கிறிஸ்துவால் திருத்தூதர்களின் மீது நிறுவப்பட்டதாகவும், புனித பேதுருவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு இன்று உரோமை ஆயரான திருத்தந்தையின் வழியாக தொடர்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.திருஅவைச் சட்டத்தின் 377ஆம் இலக்கத்தின் படி, ஆயர்களை நியமிக்கும் இறுதி அதிகாரம் திருத்தந்தைக்கே உரியது எனவும், அவர் சுதந்திரமாக ஆயர்களை நியமிக்கவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உறுதிப்படுத்தவோ செய்கிறார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயர் நியமனத்திற்கு முன்னர் நடைபெறும் ஆலோசனை செயல்முறை இரகசியமானதும் ஆன்மீகப் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதும் எனவும், திருத்தந்தையின் பிரதிநிதி (Apostolic Nuncio) மூலம் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு பின்னர் பரிந்துரைகள் திருத்தூதரகத்திற்கு அனுப்பப்படுகின்றன எனவும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயர் வேட்பாளர்களுக்கான தகுதிகள் உறுதியான விசுவாசம், நல்லொழுக்கம், இறைப்பற்று, ஞானம் மற்றும் ஆன்மாக்களுக்கு அக்கறை உள்ளிட்ட பல பண்புகளை உள்ளடக்கியதாக திருஅவைச் சட்டம் வகுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கருத்துப் பதிவில், ஆயர் நியமனம் மனித நிர்வாகச் செயல் மட்டுமல்லாது தூய ஆவியாரின் வழிநடத்தலின் கீழ் நடைபெறும் இறையருளின் செயலாகக் கருதப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆயர் நியமனங்களை அரசியல் அல்லது தனிப்பட்ட செல்வாக்கின் விளைவாகக் குறைத்து மதிப்பிடுவது திருச்சபையின் போதனைக்கு முரணானது எனவும், திருத்தந்தையின் தீர்மானங்களை விசுவாசத்துடனும் ஒற்றுமையுடனும் ஏற்றுக்கொள்வது கத்தோலிக்கரின் கடமை எனவும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

