மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்து வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக, பிரான்ஸில் மட்டும் எதிர்பாராத விதமாக சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பிரான்ஸ…
மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்து வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக, பிரான்ஸில் மட்டும் எதிர்பாராத விதமாக சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பிரான்ஸ் பொதுச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 1,000 மேலதிக மரணங்கள் பதிவாகியுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் உயிரிழந்தவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். நாட்டில் மிகக் கடுமையான வெப்ப அலையினால் 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்ட பிராந்தியங்களிலேயே இந்த மரணங்கள் பெருமளவில் நிகழ்ந்துள்ளன. தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய 'இல்-டி-பிரான்ஸ்' பிராந்தியத்தில், வீடுகளுக்குள் தனியாக வசித்து வந்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். "நகரப் புறங்களில் தனிமையில் வாழும் மற்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் பலவீனமான மனிதர்கள் மீது அண்டை வீட்டாரும் பொதுமக்களும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். இந்த மனிதநேய ஒற்றுமை மட்டுமே இத்தகைய இயற்கை பேரிடர் காலங்களில் பல உயிர்களைக் காப்பாற்ற உதவும்." என சுகாதார அமைப்பு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரான்ஸின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பாதரசம் 40 டிகிரி செல்சியஸுக்கும் (40°C) அதிகமாகப் பதிவாகி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பம் தணியாததால், மனித உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் போனதே இந்த திடீர் மரணங்களுக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த உயிரிழப்பு எண்ணிக்கை முதற்கட்டத் தரவு மட்டுமே என்பதால், உண்மைப் பலி எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். எனினும், பல நாட்களாக வாட்டி வதைத்த கடுமையான கத்தரி வெயில், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் பிரான்ஸ் முழுவதும் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதால் மக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.

