மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரான அஜித் நிவாட் கப்ராலிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஆணைக்குழு காழ்ப்புணர்ச்சி மற்றும் குரோத அடிப்படையில் செயற்படுவதாக, அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ந…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரான அஜித் நிவாட் கப்ராலிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஆணைக்குழு காழ்ப்புணர்ச்சி மற்றும் குரோத அடிப்படையில் செயற்படுவதாக, அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் எடுத்த கொள்கை ரீதியான முடிவின் அடிப்படையில் கிரேக்க பிணைமுறி கொள்வனவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மேல் நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஏற்கனவே தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தனது கட்சிக்காரருக்குப் பொறுப்புச் சுமத்த முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பத்திலேயே தீர்மானித்து, மனுவைத் தொடர அனுமதி வழங்காமல் நிராகரித்திருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான பின்னணியிலும், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், ஆணைக்குழு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வழக்குத் தாக்கல் செய்து வருவதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆணைக்குழுவின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், அவர்கள் தனது கட்சிக்காரருக்கு எதிராகக் காழ்ப்புணர்ச்சியுடனும் குரோத மனப்பான்மையுடனும் செயல்படுவதையே காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பிரதிவாதி தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவிப் பணிப்பாளர் (சட்டம்) அனுஷா சம்பன்தப்பெரும முற்றாக நிராகரித்துள்ளார். ஆணைக்குழு யாருக்கும் எதிராகக் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை எனவும், சட்டக் கட்டமைப்பு மற்றும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் பதிலளித்துள்ளார். பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இருதரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாய்மூல மற்றும் எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நேற்று முன்வைத்த ஆரம்பக் ஆட்சேபனைகளுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின், அதனை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த மனுக்கள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான பொருத்தமான உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி வழங்குவதாக நீதிபதிகள் குழாம் அறிவித்தது. இவ்வழக்கை நீதிபதிகள் மனோஜ் அல்கொஹபிட்டிய, உதேஷ் ரத்நாயக்க மற்றும் புத்திக சி. ராகல ஆகிய மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.