கொல்லப்பட்ட ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானின் உச்ச த…

கொல்லப்பட்ட ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் வெடித்த போர் சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கமேனியின் உடல் எதிர்வரும் 9 ஆம் திகதி ஈரானின் மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர நாளான நேற்று கமேனியின் இறுதிச்சடங்குகளை ஈரான் அரசு தொடங்கியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும், கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தெஹ்ரானில் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டு வரலாற்று தலமாகக் கருதப்படும் மவுண்ட் ரஷ்மோரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், கமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். இதுபற்றி, அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளோம். அவர்கள் நிலைபெற மிகவும் விரும்புகிறார்கள். இறுதிச்சடங்கிற்காக அவர்களுக்கு நாங்கள் ஒரு வாரம் விடுப்பு வழங்கியுள்ளோம் எனக் கூறியுள்ளார். (a)