அமெரிக்காவுடன் எந்தவொரு சந்திப்பையும் இந்த வாரம் நடத்தத் திட்டமிடப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் சந்திக்கவுள்ளதாக வெளியான தகவல்களை ஈரான் நிராகரித்துள்ளது.…
அமெரிக்காவுடன் எந்தவொரு சந்திப்பையும் இந்த வாரம் நடத்தத் திட்டமிடப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் சந்திக்கவுள்ளதாக வெளியான தகவல்களை ஈரான் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசிம் கரிபாபாடி, “தொழில்நுட்ப ரீதியான எந்தச் சந்திப்பும் இந்த வாரம் நடைபெறாது” என ஈரான் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து, போர்நிறுத்தம் தொடர்பான நிலைமை கேள்விக்குறியாகியிருந்தது. இதன் பின்னணியில், இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக கட்டாரில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், இது தொடர்பாக வெள்ளை மாளிகை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் கட்டார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்திருந்தன. அதன்படி, கடந்த ஜூன் 21ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், அமெரிக்கத் தடைகள் காரணமாக கட்டாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

