இன்று தேசிய மக்கள் சக்தி அரசில் இருப்பவர்கள் அனைவரும் குரங்குகளைப் போலவே நடந்து கொள்கின்றார்கள் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்து மதம் பிடித்தவர்களைப் போன்று செயற்படுகின்றார்கள் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று(29.06.2026) இடம்பெ…
இன்று தேசிய மக்கள் சக்தி அரசில் இருப்பவர்கள் அனைவரும் குரங்குகளைப் போலவே நடந்து கொள்கின்றார்கள் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்து மதம் பிடித்தவர்களைப் போன்று செயற்படுகின்றார்கள் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று(29.06.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர்களின் கடந்த காலம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் நாட்டின் உண்மையான விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை முற்றிலும் விடுத்து, குரங்குகளை எண்ணும் திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அன்று நாமல் கருணாரத்ன போன்றவர்கள், குரங்குகளை எண்ணும் விநோதமான பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
அவ்வாறு நாமல் கருணாரத்ன குரங்குகளை எண்ணிய பணத்துக்கு என்ன நடந்தது? அந்தப் பணம் தற்போது எங்கே உள்ளது? எண்ணப்பட்ட குரங்குகள் எங்கே?அவை அனுப்பப்படுவதாகக் கூறப்பட்ட தீவு உலக வரைபடத்தில் எங்குள்ளது என்று இன்று அரசில் இருக்கும் எவருக்குமே தெரியாது. இவர்களின் கூத்துக்களை நாடே பார்த்துக் கொண்டிருக்கின்றது.
விவசாயிகளின் மனக்குமுறல் தம்புத்தேகம மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் வாழும் நெல் விவசாயிகளின் தற்போதைய அவல நிலை குறித்துப் பாருங்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது சொந்தக் கிராமமான தம்புத்தேகமவுக்கோ அல்லது பொலன்னறுவைக்கோ எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. அங்குள்ள விவசாயிகள் இன்று நிர்க்கதியாக்கப்பட்டுத் தங்களின் உரிமைகளுக்காகப் போராட்ட பேரணிகளை நடத்தி வருகின்றார்கள்.
அன்று நாமல் கருணாரத்ன போன்றவர்கள் சாதாரண ஆடையை அணிந்துகொண்டு, சாதாரண ஏழை விவசாயிகளுடன் வீதியில் இறங்கி, சோறு உண்டு, வீதிகளிலேயே படுத்துறங்கி, வாகனங்கள் கூடச் செல்ல முடியாதவாறு தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்தார்கள்.ஆனால் இன்று ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் ஏற்பட்ட அதிகார போதையால் அவர்களுக்கே மதம் பிடித்துள்ளது.
முன்னர் விவசாயிகளுக்காகப் போராடியவர்கள் இன்று ஆட்சியில் அமர்ந்துகொண்டு விவசாயிகளுக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்த அரசின் அமைச்சர்கள் இன்று உழைக்கும் விவசாயிகளைக் மதுபானம் அருந்துபவர்கள் எனக் மோசமாக கூறுகிறார்கள். கிராமத்தில் கசிப்பு குடித்துக்கொண்டிருந்த ஒருவருக்குத்தான் தாங்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சராக்கினோம் என்று விவசாயிகள் இன்று கவலை வெளியிடுகின்றார்கள் என்றார்.

