(மதவாச்சி நிருபர்) விஷப் போதைப் பொருட்களுக்கு எதிரான தேசிய பிரச்சார வேலைத்திட்டத்திற்கு அமைவாக அநுராதபுர நகரம் மற்றும் நகரத்தின் சுற்றுப்புறப் பகுதிகளை மையமாகக் கொண்டு சனிக்கிழமை (27) ஒரு சிறப்பு பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அநுராதபுரம் தலைமையக பொல…

(மதவாச்சி நிருபர்) விஷப் போதைப் பொருட்களுக்கு எதிரான தேசிய பிரச்சார வேலைத்திட்டத்திற்கு அமைவாக  அநுராதபுர நகரம் மற்றும் நகரத்தின் சுற்றுப்புறப் பகுதிகளை மையமாகக் கொண்டு சனிக்கிழமை (27) ஒரு சிறப்பு பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளின் பங்கேற்புடன் இவ்வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலின் பாதகமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. நகரின் வழியாகப் பயணித்த மக்களுக்கு, நச்சுப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பாகப் பொதுமக்களின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் பொலிஸ் அதிகாரிகள் விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொசன் விழா முடியும் வரை அநுராதபுரம் பகுதியில் நடைபெறும் என தெரிவித்தனர்.