அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு கட்சிசார் உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை முறைப்படுத்துவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.யாழ். ஊடக அ…

அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு கட்சிசார் உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை முறைப்படுத்துவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்று(27.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கட்சி ஒன்றுக்கு தலா ஒரு உறுப்பினரும் தவிசாளர்களும் கலந்துகொள்ளலாம் என்கின்ற முறை பின்பற்றப்பட்ட போதிலும், பின்னாட்களில் குறித்த நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, கட்சிப் பிரதிநிதிகளும் கிராம மட்ட அமைப்புகளும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்குபற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், கடந்த காலங்களில் இல்லாத அளவு ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கொண்டுவரப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் இதை என்பிபி அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டை ஏற்படுத்துவதே பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் முக்கியத்துவத்தை உணர்கின்ற அதேவேளை, மாகாணத் தரப்பில் இருந்து குறித்த புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்ய முற்படும்போது, மாகாணத்தின் ஏனைய வைத்தியசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த 2019 ஆண்டில் வீடற்ற மக்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாத காரணத்தினால், பயனாளர்கள் இன்னும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக சுட்டிக்காட்டிய வன்னியசிங்கம் பிரபாகரன், என்பிபி அரசாங்கம் குறித்த பயனாளர்களுக்கான நிதியினை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.