அராசங்கத்தின் இயலாமையினால் மக்கள் திண்டாடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் கனிவான, சுமூகமான போக்கு தற்போது மறைந்து, அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட அச்சுறுத்தத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டிய…
அராசங்கத்தின் இயலாமையினால் மக்கள் திண்டாடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் கனிவான, சுமூகமான போக்கு தற்போது மறைந்து, அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட அச்சுறுத்தத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தங்களின் தவறுகளை மறைக்க முடியாத பின்னணியிலேயே அமைச்சர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு மூன்று வேளை சரியாக உண்பதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு ஒரே மாதத்தில் இரண்டு முறை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் அரசு ஊழியர்களுக்குக் தவணை முறையில் வீடுகள் கிடைத்தன, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் மோட்டார் சைக்கிள்கள் கிடைத்தன. ஆனால், அநுர திசாநாயக்கவின் காலத்தில் 20 கிலோ அரிசியைத் தவணை முறையில் வழங்குவதாகவே தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னர் விவசாயிகளுடன் இருப்பதாகக் கூறிக்கொண்ட இந்த அரசாங்கத்திற்கு இன்று விவசாயிகளே தலைவலியாக மாறியுள்ளனர். நெல்லுக்கு முறையான விலையை வழங்க முடியாமல், 'மாஃபியா'க்களிடம் மண்டியிடும் அரசாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், அநுர திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது டெங்கு நோயாளர்கள் குறித்து பாரியளவில் குரல் எழுப்பினார். ஆனால் இன்று டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஆளுமை இல்லை என எஸ்.எம் மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.

