நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசின் முக்கிய அமைச்சரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். சட்டத்…
நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசின் முக்கிய அமைச்சரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சுயாதீனமான விசாரணைகளே நடக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசு சட்ட நடவடிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என்றும், இதனை முறியடிப்பதற்கு, நாட்டில் உள்ள சகல எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து, தற்போதைய சூழலில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் கொழும்பில் ஊடகங்களிடம் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியிருந்தார்.எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி,
"மக்கள் நலனுக்காகவோ அல்லது ஜனநாயகத்துக்காகவோ எதிர்க்கட்சிகள் இன்று இணைய முற்படவில்லை. மாறாக, கடந்த காலங்களில் தங்களால் செய்யப்பட்ட ஊழல்களையும், தப்பியோடியவர்களையும் சட்டத்திடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்போது ஒன்றியணைய முற்படுகின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமே கடந்த கால ராஜபக்ஷக்களின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளும், ஊழல்களுமே ஆகும். அந்தப் பின்னடைவைச் சீர்செய்து, நாட்டை மீட்டெடுக்கும் கடினமான பணியையே எமது அரசு செய்து வருகின்றது." என்றார்.

