ஏ. எச். ஏ. ஹுஸைன் அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற 17 வயதுடைய இளைஞன் ஒருவர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனை மரங்கள் மற்றும் கொங்கிறீற் தூண் மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சவுக்கடி வீ…
ஏ. எச். ஏ. ஹுஸைன்
அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற 17 வயதுடைய இளைஞன் ஒருவர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனை மரங்கள் மற்றும் கொங்கிறீற் தூண் மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சவுக்கடி வீதி வளைவில் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சவுக்கடிப் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வீதியின் வளைவில் திரும்ப முடியாமல் நேராகச் சென்று, அருகிலிருந்த பனை மரங்களிலும் வேலியை ஊடறுத்து கொங்கிறீற் தூணிலும் பயங்கரமாக மோதும் காட்சிகள், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கமெராவில் பதிவாகியுள்ளன.
குறித்த இளைஞன், அதிகாலை வேளையில் தனது நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை இரவலாகப் பெற்றுக்கொண்டு, ஆறுமுகத்தான்குடியிருப்புப் பகுதியை நோக்கித் தனியாகப் பயணித்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் மீராகேணி, மையித்துப் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த கபீர் முஹம்மட் ஆதில் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் போக்குவரத்துப் பொலிஸாரால் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

