உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாகக் கருதப்படும் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) கணித்துள்ளது.எல் நினோ காலநிலை நிகழ்வுகள் பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற…
உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாகக் கருதப்படும் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) கணித்துள்ளது.எல் நினோ காலநிலை நிகழ்வுகள் பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இம்முறை அது மூன்றாவது உச்சக் கட்ட நிலைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதே ‘எல் நினோ’ என அழைக்கப்படும் இயற்கை காலநிலை மாற்றமாகும்.இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவதுடன், 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கக்கூடியது.
மூன்றாவது உச்சக் கட்ட நிலை என்பது கடல் வெப்பநிலை இயல்பை விட சுமார் 1.5°C முதல் 2.0°C வரை அதிகரிப்பதைக் குறிக்கிறது என விளக்கப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகளுக்கு இந்த நிலைமையால் நேரடி தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும், விவசாயம், நீர்வளங்கள் மற்றும் சுகாதார துறைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விளைச்சல் குறையக்கூடும் எனவும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் நீர்மின் உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக வெப்பநிலை காரணமாக நீர்ச்சத்து குறைதல், சூரிய வெப்பத் தாக்கம் (Sunstroke) மற்றும் வெப்பம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கக்கூடும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse gases), இயற்கையாக ஏற்படும் எல் நினோ நிகழ்வின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

