அரசாங்கத்தினால் அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாததுடன், தமக்காக அறிவிக்கப்பட்ட மானியத் தொகையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முத…
அரசாங்கத்தினால் அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாததுடன், தமக்காக அறிவிக்கப்பட்ட மானியத் தொகையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டது.
எனினும், 95 ஒக்டேன் பெட்ரோல், லங்கா சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர்கள், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், தமது வாழ்வாதாரத்திற்குத் தேவையான மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாததால் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மண்ணெண்ணெய் விலை அதிகமாக இருப்பதால் பல மீன்பிடிப் படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், கடற்றொழிலாளர்களுக்காக மில்லியன் கணக்கில் மண்ணெண்ணெய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், அதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த மானியத் தொகையும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
அரசாங்கம் ஒதுக்கிய மானிய நிதி எங்கே சென்றது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமக்குரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்த சூழ்நிலையை காரணம் காட்டி எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது உலக சந்தையில் விலைகள் குறைந்த போதிலும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

