எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களிலும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்களிலும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக்…

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களிலும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்களிலும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன.

நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலையை 20 ரூபாயால் குறைத்து 414 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் லீற்றரின் விலையை 25 ரூபாயால் குறைத்து 382 ரூபாயாகவும் நிர்ணயித்தது.

அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், எரிபொருள் விலை குறைந்திருந்தாலும், வாகன உதிரிப்பாகங்கள், பராமரிப்பு செலவுகள் மற்றும் ஏனைய இயக்கச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்களை குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, முச்சக்கரவண்டி கட்டணங்களிலும் மாற்றம் செய்யப்படாது என தேசிய கூட்டு முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போதைய கட்டணத்திலேயே முச்சக்கரவண்டி சேவை நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், ஒரு கிலோமீற்றருக்கு சுமார் 16 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் லலித் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.