முன்னணி பாதாள உலகக் குழு தலைவர்களில் ஓருவரான ஹரக் கட்டாவை வேறும் சிறைக்கு மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலி பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும…
முன்னணி பாதாள உலகக் குழு தலைவர்களில் ஓருவரான ஹரக் கட்டாவை வேறும் சிறைக்கு மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலி பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா'வை, வெலிசர கடற்படை முகாமிற்குள் அமைக்கப்பட்டுள்ள அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்து பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், 'ஹரக் கட்டா'வின் பெயர் அண்மையில் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் அலைபேசிகளைப் பயன்படுத்துவதாகவும், பல்வேறு சட்டவிரோதப் பொருட்களைப் புழக்கத்தில் வைத்துள்ளதாகவும் அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட பல திடீர் சோதனைகளின் போது ஸ்மார்ட்பேசிகள் உள்ளிட்ட பல அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. சிறைச்சாலையினுள் இருந்துகொண்டே சில கொடூரமான குற்றவாளிகள் இந்த அலைபேசிகள் மூலம் கொலைகளைத் திட்டமிட்டு இயக்குவதாகவும், போதைப்பொருள் கடத்தல்களை முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து, பூஸ்ஸ சிறையிலுள்ள ஆபத்தான குற்றவாளிகளை வெலிசர கடற்படை முகாமின் அதிஉயர் பாதுகாப்புச் சிறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, தெமட்டகொட சமின்த மற்றும் வெலே சுதா உள்ளிட்ட சுமார் 10 பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஏற்கனவே அங்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது பூஸ்ஸ சிறையிலிருந்தவாறே பல்வேறு குற்றச் செயல்களைப் பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக 'ஹரக் கட்டா' மீது எழுந்துள்ள பலத்த சந்தேகத்தின் பேரில், அவரையும் வெலிசர அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

