போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக்க எனப்படும் 'ஹரக் கட்டா'வை சிறையிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, அவரது மனைவியிடம் பெறப்பட்ட பல கோடி ரூபாய் லஞ்சப் பணத்தில் சந்தேகநபர்கள் சொகுசு வாகனங்கள் மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு…

போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக்க எனப்படும் 'ஹரக் கட்டா'வை சிறையிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, அவரது மனைவியிடம் பெறப்பட்ட பல கோடி ரூபாய் லஞ்சப் பணத்தில் சந்தேகநபர்கள் சொகுசு வாகனங்கள் மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க வருஷஹன்னதி ஆகியோரே இவ்வாறு லஞ்சப் பணத்தை தமது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரித் அபேசிங்க என்பவர் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெற்ற லஞ்சப் பணத்தில் ரேஞ்ச் ரோவர் ஃப்ரீலாண்டர் ரக சொகுசு ஜீப் வண்டியொன்றை கொள்வனவு செய்துள்ளதுடன், கஹதுடுவ பிரதேசத்தில் அதிநவீன சொகுசு வீடொன்றையும் நிர்மாணித்து வருவதாக நீதிமன்றில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதேவேளை, வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான அருண ஸ்ரீ சதுரங்க வருஷஹன்னதி என்பவர், இந்த லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ரக கருப்பு நிற சொகுசு கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். விசாரண அதிகாரிகள் சோதனையிட்ட போது, அந்த கார் அவரது வீட்டில் வைக்கப்பட்டு பழுதுபார்க்கும் பணியில் இருந்ததாக இலஞ்ச  ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்கள் தற்போது வைத்துள்ள இந்த அதிசொகுசு சொத்துக்கள் அனைத்தும், டுபாயில் வைத்து ஹரக் கட்டாவின் மனைவியான மஹேஷிகா மதுவந்தி என்பவரால் வழங்கப்பட்ட 12 கோடி ரூபாவிற்கும் அதிக லஞ்சப் பணத்தில் கொளவ்னவு செய்யப்பட்டவை என ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி, ஹரக் கட்டாவை மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக சந்தேகநபர்கள் மூவரும் உறுதியளித்திருந்தனர். எனினும், அவ்வாறு செய்யாமல் அவரை காலி பூஸ்ஸ சிறைச்சாலையிலேயே தொடர்ந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை உணர்ந்த அவரது மனைவி மஹேஷிகா மதுவந்தி, தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். எனினும், சந்தேகநபர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளனர். பணத்தைத் திருப்பித் தர மறுத்த சரித் அபேசிங்க, ஹரக் கட்டாவின் மனைவியிடம், "நீங்கள் தந்த லஞ்சப் பணத்தில் ஒரு பகுதி ரகித ராஜபக்சவிடம் கொடுக்கப்பட்டுள்ளதால், அதை அவரிடமிருந்து திரும்பப் பெற முடியாது" எனக் கூறியுள்ளார். எனினும், ரகிதவிடம் கொடுத்த பணத்திலிருந்து 200 இலட்சம் ரூபாவையாவது எப்படியாவது திரும்பப் பெற முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சரித் அபேசிங்க 'ஹெர்பி' எனப்படும் தரகரின் நண்பர் ஒருவர் ஊடாக 200 இலட்சம் ரூபாவை ஹரக் கட்டாவின் மனைவி மஹேஷிகா மதுவந்தியிடம் திருப்பி ஒப்படைத்துள்ளார். ஏனைய தொகையை சந்தேகநபர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகத் தொடர்ந்து வைத்துள்ளனர் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடமிருந்து சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ச மற்றும் அருண வருஷஹன்னதி ஆகியோரின் வெளிநாட்டுப் பயண ஆவணங்கள் பெறப்பட்டு சோதிக்கப்பட்டன. அதன்படி, இவர்கள் மூவரும் 2023.03.25 அன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்து, பின்னர் 2023.03.29 அன்று மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.