சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவூதி அரசின் அர…
சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவூதி அரசின் அராம்கோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹார்முஸ் ஜல சந்தியின் மேற்கு கடலோர பகுதியான ராஸ் தனுரா என்ற பகுதியில் அமைந்துள்ளன. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியதால், அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் கடந்த 4 மாதங்களாக எந்த பணியும் நடைபெறாமல் இருந்தது. இதனால் பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் முற்றிலும் தடைபட்ட நிலையில் இருந்தன.
இந்நிலையில் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹார்முஸ் ஜல சந்தியில் கடந்த சில நாட்களாக கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனால் அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் மீண்டும் பணிகள் தொடங்கின.
இங்கு பணியாற்றும் அராம்கோ நிறுவனத்தின் அதிகாரிகள், பொறியாளர்கள், தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்வது வழக்கம். இங்கு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து, நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் 14 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
எதிர்பாராதவிதமாக ஹெலிக்கொப்டர் நேற்று (28) காலை விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிக்கொப்டரில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர். (a)

