அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை அடுத்த 30 நாட்களுக்கு ஈரானின் முழுமையான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச…

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை அடுத்த 30 நாட்களுக்கு ஈரானின் முழுமையான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஆளில்லா விமானம் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரான் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பக்தாத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அப்பாஸ் அராக்சி, அங்குள்ள தனது ஈராக் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இணைந்து நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், "ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாக விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம்" என்று வலியுறுத்தியுள்ளார்.ஹோர்முஸ் நீரிணை

இந்த ஒப்பந்தத்தின்படி ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பு ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கே உள்ளது என்றும், இதில் வேறு எந்தவொரு நாடோ அல்லது தரப்போ தலையிட முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய பதற்றமான சூழலில் ஏதேனும் வெளிநாட்டுத் தலையீடுகளோ அல்லது ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளோ எடுக்கப்பட்டால், அது பிராந்தியத்தின் நிலைமையை மேலும் மோசமாக்குவதுடன், இந்த முக்கிய கடல் வழிப்பாதையை வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறப்பதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் அராக்சி எச்சரித்துள்ளார்.

தற்போதைய தடைகள் மற்றும் தடங்கல்கள் அனைத்தும் நீக்கப்பட்ட பிறகு, அடுத்த 30 நாட்களுக்குள் இந்த நீரிணையின் முழுமையான போக்குவரத்துத் திறன் மீட்டெடுக்கப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.