ஹொரணை, அங்குருவாதொட்ட வீதியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்ப…

ஹொரணை, அங்குருவாதொட்ட வீதியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சுமார் 10 நாட்களுக்கு முன்னர் விற்பனை நிலையத்தின் முன்பக்கக் கண்ணாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளார்.

அதே நாளில், அருகிலிருந்த உணவகம் ஒன்றிலும் திருட்டில் ஈடுபட்ட அவர், சிகரெட்டுகள் மற்றும் பால் மா பாக்கெட்டுகள் உள்ளிட்ட சுமார் 66,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் அபகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸார் முன்னெடுத்த சுமார் 10 நாட்கள் நீடித்த விசாரணைகளின் பின்னர், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் மேலும் இரு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் 1993 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வீடு உடைப்பு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (04) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.