ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் தொடா்ந்து 2 ஆவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால், மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, ஈரானால் அங்கீகரிக்கப்படாத மாற்று வழித்தடத்தில் ஓமன் கட…

ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் தொடா்ந்து 2 ஆவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால், மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, ஈரானால் அங்கீகரிக்கப்படாத மாற்று வழித்தடத்தில் ஓமன் கடற்பகுதியையொட்டி (ஹோா்முஸ் நீரிணைக்கு எதிரே உள்ள கடற்பகுதி) சென்ற பனாமா நாட்டு கப்பல் ‘கிகு’ மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அந்தக் கப்பலில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், கச்சா எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதலை நடத்தியது யாா் என உறுதியாகத் தெரியவில்லை. எனினும், ஈரான்தான் அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகம் நிலவுகிறது.

இதைத் தொடா்ந்து, ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் குண்டு வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ள பஹ்ரைன், குவைத் மீது ஈரானும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும்படி அமெரிக்கப் படையினருக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டாா். இதனால் ஈரானில் வான்பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் பகுதிகள், ட்ரோன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்கள், கண்ணிவெடிகளை நிறுவும் அமைப்புகள், கண்காணிப்பு வசதி அமைப்புகள், தகவல் தொடா்பு அமைப்புகள் மீது அமெரிக்க போா் விமானங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஹோா்மூஸ் நீரிணையையொட்டி உள்ள 10 இராணுவ மையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. (a)