அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்தபோதிலும், சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச…

அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்தபோதிலும், சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

கடந்த 25-ஆம் தேதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சிங்கப்பூர் சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. தங்களது கடல் எல்லையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் விளக்கம் அளித்தது.

இதற்கு பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்க விமானப்படை ஈரானின் பல ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற தாக்குதல்களில், ஈரானின் 10-க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, குவாசம் தீவில் உள்ள சிரிக் பகுதி மற்றும் ஹர்முஸ்கன் மாகாணத்தின் பண்டர்-இ-லெங்கா உள்ளிட்ட இடங்களில் அமைந்திருந்த ஏவுகணை கிடங்குகள், ரேடார் தளங்கள் மற்றும் ஆளில்லா விமான வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும், ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் எண்ணெய் கப்பல்களையும் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்காக ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தேவை ஏற்பட்டால் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை முழுமையாக தொடரும். அந்த நிலை வந்தால் ஈரான் என்ற நாடே இல்லாமல் போகும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக கைவிடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக இரு தரப்பும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “ஈரான் தரப்பில் இருந்து சந்திப்புக்கான கோரிக்கை வந்துள்ளது. இந்த சந்திப்பு கட்டாரின் தலைநகர் தோஹாவில் நாளை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சந்திப்பு குறித்து ஈரான் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.