ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முடக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அந்த முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று (02) ந…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முடக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அந்த முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து குற்றவாளிகளும், அவர்கள் எந்த பதவி அல்லது செல்வாக்கில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஈஸ்டர் தாக்குதல் நாட்டிற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதுடன், குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தினர் உயிரிழப்புகளையும் நிரந்தர உடல் மற்றும் மன உளைச்சல்களையும் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை, இந்தச் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் சமூகமும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், காத்தான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் அதன் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றைத் தடைசெய்ய அல்லது திசைதிருப்ப முயற்சிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
மேலும், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் முழுமையாக அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதுடன் நாட்டில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

