சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவினர் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறை…
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவினர் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர்.
ஜூன் 24 முதல் 30 வரை சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த விஜயத்தின் போது, அண்மைக்கால பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் சீர்திருத்தத் திட்டங்களுக்காகத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் இருப்பதற்கும் தூதுக்குழுவினர் அரசாங்கத்திற்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் உறுதியளித்தனர். (a)

