இந்தோனேசியா - யோக்யகர்த்தா நகரில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப் போக்கு தொடர்பான வழக்கில், மேலும் 14 பேரை சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27-ஆக அதி…

இந்தோனேசியா - யோக்யகர்த்தா நகரில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப் போக்கு தொடர்பான வழக்கில், மேலும் 14 பேரை சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளதுடன், இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் “லிட்டில் அரேஷா” என்ற குறித்த காப்பகத்தை பொலிஸார் முற்றுகையிட்டபோது, இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், சில சிறுவர்கள் கதவுகளுடன் சேர்த்து பிணைக்கப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தனர்.

இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த காப்பகத்தின் உரிமையாளர், முதல்வர் மற்றும் பராமரிப்பாளர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது புதிதாக பெயரிடப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களில் 10 சிறுவர் பராமரிப்பாளர்கள், ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் நிர்வாக ஊழியர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காப்பக பராமரிப்பாளர்கள் இந்த சித்திரவதைகளில் நேரடியாகப் பங்கெடுத்ததாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட ஏனைய ஊழியர்கள் இதனைத் தடுக்காது அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீதான விசாரணைகளை நிறைவு செய்துள்ள பொலிஸார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் இன்னும் பலர் சந்தேக நபர்களாக சேர்க்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.