அகுரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் வைத்து, சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் போது, துப்பாக்கிதாரிகள் வந்த வாகனத்தைச் செலுத்தியதாகக் கூறப்படும் நபர், விசேட பொலிஸ் குழுவினரால் மாலைதீவில் வைத்து கைது செய்யப்பட்டு இ…

அகுரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் வைத்து, சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் போது, துப்பாக்கிதாரிகள் வந்த வாகனத்தைச் செலுத்தியதாகக் கூறப்படும் நபர், விசேட பொலிஸ் குழுவினரால் மாலைதீவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று மாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் படபொல, எத்துகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.

இந்தச் சட்டத்தரணியும் அவரது மனைவியும் கடந்த 2026.02.13 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சந்தேகநபர் பஹ்ரைனில் இருந்து மாலைதீவுக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு எதிராக இலங்கையினால் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தலுக்கு (Red Notice) அமைய, அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இது குறித்து இலங்கைக்கு அறிவித்தனர். இதனையடுத்து, இலங்கையிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் அவரை கைது செய்தனர்.

பின்னர், மாலைதீவின் தலைநகரான மாலேயிலிருந்து அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் மேல் மாகாண (தெற்கு) குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.