(நா.தனுஜா) செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகாமையில் இருந்த கோவிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடும் என திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ள மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ,…
(நா.தனுஜா) செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகாமையில் இருந்த கோவிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடும் என திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ள மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர். அச்சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளித்த சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் தனது மனைவியான சம்பா விஜேவிக்ரம ஊடாக 'வீரகேசரி' வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் புதிய தகவல்களை வெளிப்படுத்தியிருக்கும் சோமராஜபக்ஷ, சிறைச்சாலைக்குள் இருந்து இவை பற்றிய மேலதிக விபரங்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனது பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு கேள்விகள் காணப்படுவதாகவும், எனவே தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

