கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, அந்த காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது: குறித்…

கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, அந்த காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

குறித்த பெண் தனது காதலனின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து தனது காதலனால் வன்புணர்வு செய்யப்பட்ட அந்தப் பெண், பின்னர் காதலன் தொலைபேசி மூலம் அழைத்த அவனது நண்பர்கள் மூவராலும் வன்புணரப்பட்டுள்ளார்.

விசாரணைகளில், காதலனுக்கு 33 வயது என்பதும், மற்ற மூவருக்கும் 37 முதல் 55 வயது வரை என்பதும், அவர்கள் அனைவரும் வில்முவா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மதுபோதையில் இருந்த சந்தேக நபர்கள், இரவு முழுவதும் அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். மறுநாள் அவரை மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் வன்புணர்ந்துள்ளனர். இந்த இரண்டாவது சம்பவம் நடைபெற்ற வீட்டின் பராமரிப்பாளரே 55 வயதுடைய சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் மறுநாள் அங்கிருந்து தப்பித்த அந்தப் பெண், பேருந்து மூலம் கண்டிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நலம் மோசமடைந்து, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் முதலில் உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அவசர நிலையில் மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னைச் பரிசோதித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில், சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) நடந்த கொடூரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, உடதும்பர பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கினை வில்முவா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, வில்முவா பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு குறித்த நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

வில்முவா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் யு. சுமேத பண்டார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஜே. பி. அனோமா குமாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.