கைவிரல் அடையாள பதிவு முறைமைக்கு தனியார் துறையில் கடமையாற்றி வரும் மருத்துவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல முன்னணி தனியார் மருத்துவமனைகள், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தையும் மற்றும் பணியை முடித்துச் செல்லும் ந…

கைவிரல் அடையாள பதிவு முறைமைக்கு தனியார் துறையில் கடமையாற்றி வரும் மருத்துவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல முன்னணி தனியார் மருத்துவமனைகள், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தையும் மற்றும் பணியை முடித்துச் செல்லும் நேரத்தையும் பதிவு செய்வதற்காக கைரேகை அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்துள்ளன. புதிய நடைமுறையின்படி, மருத்துவர்கள் தங்களது பணி நேரத்திற்குச் சமூகமளிக்கும் போதும், பணி முடிந்து வெளியேறும் போதும் கைரேகை இயந்திரம் மூலம் தங்களது வருகையை அடையாளப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நிர்வாகத்தின் இந்த புதிய முடிவுக்கு தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது பலத்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சாதாரண மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படும் கொடுப்பனவு விகிதம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், இத்தகைய கடுமையான விதிகளை விதிப்பது தங்களை கடுமையான தொழில்சார் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கும் என பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு இந்த முறைமை ஏற்கனவே நடைமுறையில் இருந்த போதிலும், தற்போது அதனை மருத்துவர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு மருத்துவமனை நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன. தற்போது இலங்கையின் தனியார் மருத்துவமனை அமைப்பில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர், தனியார் மருத்துவப் பீடங்கள் அல்லது வெளிநாட்டு மருத்துவப் பீடங்களில் பட்டம் பெற்று தகுதி பெற்ற மருத்துவர்களாவர். இவர்களுக்கு மேலதிகமாக, அரச மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் தங்களது கூடுதல் கடமையாக, பகுதி நேர அடிப்படையில் இந்த தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.