ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு பிரார்த்தனை தலைநகர் டெஹ்ரானில் நேற்று (05) நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். கமேனியின் மகன்களான முஸ்தபா, மீசம் மற்றும் மசூத் கமேனி ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு பிரார்த்தனை தலைநகர் டெஹ்ரானில் நேற்று (05) நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கமேனியின் மகன்களான முஸ்தபா, மீசம் மற்றும் மசூத் கமேனி ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐ.ஆர்.ஜி.சி) தளபதி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இருப்பினும், கடந்த மார்ச் மாதம் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற கமேனியின் மற்றொரு மகனான அயத்துல்லா மோஜ்தபா கமேனி இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இது அவர் எங்கு, எப்படி உள்ளார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
புதிய உச்ச தலைவர் அயத்துல்லா மோஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து ஈரான் அரசுத் தரப்பில், “அவருக்குப் பெரிய அளவிலான முகச்சிதைவோ அல்லது உறுப்பு இழப்போ ஏற்படவில்லை, அவர் நலமாக உள்ளார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அவர் தொடர்ந்து மக்கள் பார்வையில் படாமல் இருப்பது ஈரான் மக்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலில் மோஜ்தபாவும் கடுமையான காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் அவரை மீண்டும் இலக்கு வைக்கக்கூடும் என்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அவர் பொதுவெளியில் வருவதைத் தவிர்த்துள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது குரல் பதிவைக் கூட வெளியிட வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கமேனியின் உடல் ஈரானின் பல்வேறு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வரும் ஜூலை 9 ஆம் திகதி அவரது சொந்த ஊரான மஷ்ஹாத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அந்த நிகழ்வில் மோஜ்தபா கலந்துகொண்டு பிரார்த்தனை செய்ய விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஈரானிய தேசியக் கொடி போர்த்தப்பட்டு, அதன் மீது கறுப்பு நிற தலைப்பாகை வைக்கப்பட்டிருந்த கமேனியின் சவப்பெட்டி, கடந்த பெப்ரவரி மாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவருடைய உறவினர்கள் நால்வரின் சவப்பெட்டிகளுக்கு அருகருகே வைக்கப்பட்டிருந்தது.
வான்வழித் தாக்குதலுக்குப் பலியான அந்த உறவினர்களில், கமேனியின் பேத்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ச் சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், தற்போதைய தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தில் ஜூலை 4 முதல் தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெற திட்ட மிடப்பட்டுள்ளது. (a)

