கொழும்பு,கிருலப்பனையில் 624 குடியிருப்புகள் கொண்ட பிரம்மாண்டமான கொழும்பு நகர்ப்புற வீடமைப்புத் திட்டம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புத் தொகுதி வரிசையில் ஒரு புதிய குடியிருப்பு வளா…
கொழும்பு,கிருலப்பனையில் 624 குடியிருப்புகள் கொண்ட பிரம்மாண்டமான கொழும்பு நகர்ப்புற வீடமைப்புத் திட்டம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புத் தொகுதி வரிசையில் ஒரு புதிய குடியிருப்பு வளாகமாக இந்த வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிருலப்பனை, டி.எம். கொழம்பகே மாவத்தையில் அமைந்துள்ள 'த ரெசிடென்சிஸ் கிருலப்பனை' வீட்டுவசதித் திட்டமானது, இரண்டு குடியிருப்பு கோபுரங்களைக் (பி1 மற்றும் பி2) கொண்டுள்ளது. இதில் ஒரு கோபுரம் 11 தளங்களையும், மொத்தம் 624 குடியிருப்பு அலகுகளையும் கொண்டுள்ளது. இத்திட்டம் 5.784 பில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.குடியிருப்பாளர்கள்.. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன், இத்திட்டம் கொழும்பு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் செயல்படுத்தப்பட்டது. பூர்வராம, நாரஹேன்பிட்டவில் உள்ள சமகி மாவத்த, சமகி வத்த மற்றும் கிரிமண்டல மாவத்த நெடுகிலும் உள்ள பிச்சமல் சுற்றுவட்டப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும், களனி பள்ளத்தாக்கு ரயில்வே நவீனமயமாக்கல் திட்டத்தால் இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்களுக்கும் இந்தக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் தீ பாதுகாப்பு மற்றும் எரிவாயு அமைப்புகள், நீர் மற்றும் கழிவுநீர் வசதிகள், பயணிகள் மின்தூக்கிகள், மின்சார சேவைகள் மற்றும் ஒரு பொது வாகன நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன. மேலும், இதில் ஒரு மழலையர் முன்பள்ளி, பகல்நேரப் பராமரிப்பு மையம்? சமுதாயக் கூடம், பல்பொருள் அங்காடி, சுகாதார மையம், கிராம அலுவலர் அலுவலகம், பொலிஸ் சோதனைச் சாவடி மற்றும் தீயணைப்புப் பிரிவு ஆகியவையும் அடங்கும்.
இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைச் சூழலையும் வாழ்வாதாரத்தையும் மேலும் மேம்படுத்துவதற்காக ஐந்து புதிய அணுகுசாலைகள் அமைத்தல், கிருலப்பனை கால்வாய் வலையமைப்பை மேம்படுத்துதல், வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்கான மழைநீர் தேக்கக் குளம், 38 கடைகளைக் கொண்ட ஒரு வணிகக் கட்டிடம், நடைபாதைகள் மற்றும் ஒரு உடற்பயிற்சி மையம் ஆகியவை அடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

