(க.சிவலிங்கமூர்த்தி) இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான ஊடக உறவுகளை பலப்படுத்தும் நோக்கில், இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பிரம்மாண்டமான ஊடக பேரமர்வு 2026 நடைபெறவுள்ளது. இருநாட்டு முன்னணி ஊடக வல்லுநர்கள் பங்கேற்கும் இம்மாநாடு குறித்து இலங்கை…

(க.சிவலிங்கமூர்த்தி) இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான ஊடக உறவுகளை பலப்படுத்தும் நோக்கில், இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பிரம்மாண்டமான ஊடக பேரமர்வு 2026 நடைபெறவுள்ளது. இருநாட்டு முன்னணி ஊடக வல்லுநர்கள் பங்கேற்கும் இம்மாநாடு குறித்து இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் கடந்த 26 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான ஊடக உறவுகளை பலப்படுத்தும் உன்னத நோக்கோடு, கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு, ஊடகத்துறையை மறுசீரமைக்கும் முக்கிய விடயங்களை மையமாகக் கொண்டு பல வட்டமேசை மாநாடுகளையும், நிபுணத்துவ ரீதியிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்வுகளையும் தொடர்ச்சியாக ஒழுங்கமைத்து வருகின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னணி ஊடக நிபுணர்கள் ஒன்றுகூடும் வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஊடக பேரமர்வு 2026 ஆம் ஆண்டுக்கான ஏற்பாடுகள் தற்போது மிக விமரிசையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரம்மாண்டமான விழாவின் 2 வது பதிப்பானது, இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், பொருளாதார சவால்கள் மற்றும் வாசகர்களது ரசனை மாற்றங்களுக்கு ஏற்ப பத்திரிகைகளும் ஏனைய ஊடகங்களும் தங்களை எவ்வாறு தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பேரமர்வில் விரிவாக ஆராயப்படவுள்ளது. குறிப்பாக, துல்லியம், சுதந்திரம், செய்திகளை சரிபார்த்தல், பொது நலன் மற்றும் வாசகர்களின் நம்பிக்கை ஆகிய அடிப்படை விழுமியங்களை நிலைநிறுத்துவது எவ்வாறு என்பது பற்றிய ஆழமான கலந்துரையாடல்கள் இதில் இடம்பெறவுள்ளன. மாறிவரும் உலகுடனான ஒத்திசைவு எனும் பிரதான தொனிப்பொருளின் அடிப்படையில் இம்முறை அமர்வுகள் யாவும் திட்டமிடப்பட்டுள்ளன. ஊடக பேரமர்வின் 1 வது பதிப்பு பெற்ற பெருவெற்றியைத் தொடர்ந்து, இந்த 2 வது அமர்வில் தற்கால ஊடகங்களின் செல்நெறி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஊடகப் படைப்பாற்றலை வரையறை செய்யும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த விற்பன்னர்கள் பல சுற்று விவாதங்களை நடத்தவுள்ளனர். மேலும், கேட்போருடனான ஈடுபாடு, நவீன தொழில்நுட்பமும் ஊடகவியலும், போலித் தகவல்களைக் கண்டறிந்து உண்மையை உறுதிப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல், ஊடகங்களின் பொருளாதார நிலைத்தன்மை, வளர்ந்து வரும் நவீன கதை கூறல் வடிவங்கள் மற்றும் செய்தி நுகர்வின் எதிர்காலம் போன்ற பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் கீர்த்திமிக்க மற்றும் புகழ்பெற்ற ஊடக ஆளுமைகளான அஷோக் மாலிக், ஸ்மிதா ப்ரகாஷ் மற்றும் மர்யா ஷகில் ஆகியோருடன் இலங்கையின் முன்னணி ஊடகத்துறை நிபுணர்களும் கலந்துகொண்டு சிறப்பான கருத்துரைகளை வழங்கவுள்ளனர். சிறப்புரை அமர்வுகள், குழுநிலை விவாதங்கள் மற்றும் பரஸ்பர ஊடாடும் நல்வாய்ப்புகள் மூலமாக இன்றைய ஊடக உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களை மேம்படுத்துவதே இந்த பேரமர்வின் முக்கிய இலக்காகும். இதில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள், டிஜிட்டல் உள்ளடக்கப் படைப்பாளர்கள், பேராசிரியர்கள், தொடர்பாடல் நிபுணர்கள், ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் வளர்ந்து வரும் ஊடகச் சூழல் மீது ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள முடியும். திடீர் மாற்றங்களால் சூழப்பட்டுள்ள தற்போதைய ஊடகக் கட்டமைப்பில், ஊடகங்களின் எதிர்காலம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக இந்த ஊடக பேரமர்வு 2026 திகழவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், இது குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் ஆர்வம் உள்ளவர்கள் றறற.அநனயைகநளவ.டம என்ற இணையத்தள முகவரியை நாட முடியும் என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.