கொழும்பின் பேருந்துப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பசுமை நகரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் திட்டத்தின் (GCIEP) கீழ் ஆய்வு மற்றும் அறிக்கை தயாரித்தல் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த ஆய்வு மற்றும் அறிக்கை தயாரிக்கும் பணிகளை கொழும்பில் உள்ள பிரித்தா…
கொழும்பின் பேருந்துப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பசுமை நகரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் திட்டத்தின் (GCIEP) கீழ் ஆய்வு மற்றும் அறிக்கை தயாரித்தல் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
குறித்த ஆய்வு மற்றும் அறிக்கை தயாரிக்கும் பணிகளை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகமும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும் (UNDP) இணைந்து மேற்கொண்டுள்ளன.மின்சாரப் பேருந்து
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP)அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த அறிக்கை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தெரசா ஓ'மஹோனி, கொழும்பில் மின்சாரப் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு செயல்திட்டத்தை உள்ளடக்கிய திட்டத்தின் விளைவுகளை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார். நாட்டின் பரந்த மின்சாரப் போக்குவரத்து செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இலங்கை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன்போது விளக்கமளித்துள்ளது.
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின்படி, இலங்கையின் தேசியக் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மேலும் நிலையான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான நகரப் போக்குவரத்து அமைப்பின் வளர்ச்சிக்கு இந்த முயற்சி பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

