ராஜஸ்தானின் தவுசா (Dausa) அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் நேற்று (30) நள்ளிரவு நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில், பயணிகளில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்…

ராஜஸ்தானின் தவுசா (Dausa) அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் நேற்று (30) நள்ளிரவு நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில், பயணிகளில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து, நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாகப் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

பேருந்திற்குள் தீ பரவியதை உணர்ந்த பயணிகள் உயிர் பிழைக்க அலறியடித்துக்கொண்டு வெளியேற முயன்றனர். இருப்பினும், சிலர் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டதால், அவர்களால் தப்பிக்க முடியவில்லை. இக்கொடுமையான தீவிபத்தில் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அதிகாலை நேரத்தில் பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், பேருந்தின் அதிவேகமும் விபத்தின் தீவிரத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். சற்றே கண் அசந்தாலும் அது பெரும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, ஓட்டுநர்களும் பயணிகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது தற்போதைய அவசியமான எச்சரிக்கையாகும்.