முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அபிவிருத்தி செய்யப்பட்ட நாடு, தற்போதைய ஆட்சியின் கீழ் நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் முன்னேற்ற…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அபிவிருத்தி செய்யப்பட்ட நாடு, தற்போதைய ஆட்சியின் கீழ் நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட நாடு, தற்போது பாரிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி பின்னடைவைச் சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கைத்தொழில் துறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், புதிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆணவம் குறையவில்லை என்றும், அரசாங்கம் இன்னும் வெற்றுப் பேச்சுகளையும் அகந்தையையும் கைவிடாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கே தங்களது மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களிடமிருந்து விலகி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், கிராமப்புறங்களின் அபிவிருத்திக்காக பயனுள்ள எந்தத் திட்டங்களையும் தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.