பேருவளையில் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துடுப்பாட்டப் போட்டியின் போது, 46 வயதுடைய வீரர் ஒருவர் மைதானத்தில் திடீரெனச் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துடுப்பாட்டப் போட்டியின் போது, துடுப்பாட்ட வீரரான ‘சுல்பிகர்’ (Zu…
பேருவளையில் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துடுப்பாட்டப் போட்டியின் போது, 46 வயதுடைய வீரர் ஒருவர் மைதானத்தில் திடீரெனச் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துடுப்பாட்டப் போட்டியின் போது, துடுப்பாட்ட வீரரான ‘சுல்பிகர்’ (Zulfikar) என்பவர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் திடீரென மைதானத்தில் சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இரு அணி வீரர்களும் நடுவர்களும் உடனடியாக ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி அளிக்க முற்பட்டனர். அங்கிருந்த மருத்துவக் குழுவினரின் உதவியுடன் அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் துடுப்பாட்டப் போட்டி நேரலையாக (Live) ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்தத் தொடரை காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளனர்.

