(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு முற்றாக இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்…
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு முற்றாக இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பேராசிரியர் ஜி. எல். பீரிஸின் இல்லத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் நடைபெற்றது. சுமார் 25 அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் குறித்து பின்வருமாறு பிரதானமாக சுட்டிக்காட்டினார், ஐரோப்பிய நாடுகளுக்கு எமது நாட்டுப் பொருட்களை வரி இன்றி ஏற்றுமதி செய்வதற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை எமக்குத் சும்மா கிடைத்துவிடவில்லை. மனித உரிமைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை இணங்கி நடப்பதாக உறுதியளித்ததன் பின்னரே இந்தச் சலுகை வழங்கப்பட்டது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையின் தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்த சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில், புதிய சட்டம் கொண்டு வரப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தேன். ஆனால், தற்போதைய நீதி அமைச்சர் கொண்டு வந்த புதிய சட்டம் அனைத்து தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் அரசாங்கம் அதனை வாபஸ் பெற்றது. புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. அரசாங்கம் எதனையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யவில்லை. இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் நடத்தப்படும் விதம் மற்றும் சித்திரவதைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் பார்வை திரும்பியுள்ளதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ், சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தது. இலங்கை கையெழுத்திட்டுள்ள சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆராயவே அவர்கள் வந்திருந்தனர் என்று குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றாலும், கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களில் தெளிவான விதிகள் உள்ளன. சித்திரவதைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை. இத்தகைய செயல்கள் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துவிட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டதை பீரிஸ் வன்மையாகக் கண்டித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துவிட்டு வந்த உடனே குற்றப் புலனாய்வுத் திணைக்களம அவரை கண்காணித்துக் கைது செய்துள்ளது. இது ஒரு முழுமையான பொலிஸ் ஆட்சியின் பண்பாகும். அரசியலமைப்பின் கீழ் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது எங்களது அடிப்படை உரிமை. கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பினோய் ஹெட்டியாரச்சி, சுகீஸ்வர பண்டாரவுடன் வாகனத்தில் பயணித்தார் என்ற ஒரே காரணத்திற்காக எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு, சுமார் 5 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டார். இது நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என்பதால், இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும், மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தொடரவுள்ளதாகவும் அறிவித்தார்.

