மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேரில் சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். இதன்போது, உயிரிழந்த பெண்ணின்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேரில் சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இதன்போது, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், வைத்தியசாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலான தங்களது சந்தேகங்களையும் கவலைகளையும் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.

மேலும், தங்களுக்கு நேர்ந்த துயரமான அனுபவம் வேறு எந்தக் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது என்றும், இந்த மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

உறவினர்களின் கருத்துகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உயர் அதிகாரியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கமளிக்கும் வகையில் விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வாழைச்சேனை, பேத்தாழையைச் சேர்ந்த திருமதி ஜெயப்பிரியா மதுராந்தகன் என்ற கர்ப்பிணிப் பெண் கடந்த 17ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த 22ஆம் திகதி குழந்தையைப் பிரசவித்த அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.