மட்டக்களப்பில் அண்மையில் இடிந்து வீழ்ந்த புதிய பாலத்துக்கு மாற்றாக, தற்காலிக பெய்லி ரக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இதற்கான கட்டுமானப் பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆ…
மட்டக்களப்பில் அண்மையில் இடிந்து வீழ்ந்த புதிய பாலத்துக்கு மாற்றாக, தற்காலிக பெய்லி ரக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதற்கான கட்டுமானப் பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், அவற்றை விரைவாக முன்னெடுக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தில் ஏற்பட்டிருந்த வெடிப்புகள் தொடர்பாக ஏற்கனவே தொழில்நுட்ப அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மாலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
இதனால் மட்டக்களப்பு நகருக்கான முக்கிய போக்குவரத்து பாதை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தர புதிய பாலம் அமைக்கப்படும் வரை பொதுமக்களின் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்காலிக பெய்லி பாலம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இடிந்து வீழ்ந்த இந்த பாலம், மட்டக்களப்பு நகருக்குள் நுழைவதற்கான முக்கிய இணைப்புப் பாலங்களில் ஒன்றாகும். மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, பாடசாலைகள் மற்றும் பல முக்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் பிரதான போக்குவரத்து வழியாகவும் இந்தப் பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

