மேற்காசியாவில் இருதரப்பு போர்நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈ…
மேற்காசியாவில் இருதரப்பு போர்நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த "தீர்க்கமான நடவடிக்கை" எடுக்கப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2:00 மணி முதல் 3:00 மணி வரை குவைத்தில் உள்ள அலி அல் சலிம் விமானப்படை தளம், பஹ்ரைனின் சல்மான் துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் 5 ஆவது கடற்படைத் தலைமையகம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கூட்டுத் தாக்குதலின் மூலம் அமெரிக்க இராணுவத்தின் 8 முக்கியமான உட்கட்டமைப்புகளை முற்றிலும் அழித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகம் 27 ஆம் திகதி ஈரானுக்குள் இருக்கும் பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹோர்முஸ் நீரிணை அருகே 2 மில்லியன் பேரல் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற பனாமா கொடியிடப்பட்ட 'M/T Kiku' என்ற கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அமெரிக்காதான் முதலில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரானின் 5 கரையோரப் பகுதிகளைத் தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தைத் தணிக்க எட்டப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வொஷிங்டன் மீறிவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. "இனிமேல் ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஈரான் மீது சிறிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதற்கு மிகக் கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான பதில்டி கொடுக்கப்படும்" என ஈரானின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் இராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வான்வழியே வந்த ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. வெடிப்புச் சத்தங்கள் கேட்பதால் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பஹ்ரைன் உள்நாட்டு விவகார அமைச்சு நாட்டில் ஆபத்து எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கச் செய்துள்ளது. குடிமக்கள் அனைவரும் பதற்றமடையாமல் உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மாறி மாறித் தொடுத்து வரும் இத்தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

