மீண்டும் தரம் உயர்ந்த இலங்கை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join முதலீடுகளை ஊக்குவித்தல், போட்டித்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல…

மீண்டும் தரம் உயர்ந்த இலங்கை

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

முதலீடுகளை ஊக்குவித்தல், போட்டித்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிப்பதற்காக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் குழு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அனுமதி அளித்துள்ளது. வளர்ச்சி, பின்னடைவுத்திறன் மற்றும் திறந்த தன்மைக்கான இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இலங்கை முன்வைத்துள்ளது. தனியார் துறை தலைமையிலான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அவசியமான பொருளாதார ஆளுமை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த ஆதரவை வழங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வர்த்தகத் தடைகளைக் குறைத்தல், முதலீட்டுச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் நிதித்துறையை வலுப்படுத்துதல் ஆகிய மறுசீரமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட ஆதரவை இந்த முதலாவது நடவடிக்கை வழங்குகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் ஆளுமையை மேம்படுத்துதல், அத்துடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் ஆற்றல் செலவுகளைக் குறைப்பதற்கும் மின்சாரத் துறையின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் இது ஆதரவளிப்பதாக உலக வங்கி குழுமம் குறிப்பிட்டுள்ளது. வறுமையைக் குறைப்பதற்கும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குமான ஒரு வழியாக, நாடுகள் அதிக மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உதவுவதில் உலக வங்கி குழுமம் உறுதியுடன் உள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையுடன் 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டாண்மையைக் கொண்டுள்ள உலக வங்கி, தற்போது கல்வி, சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒட்டுமொத்தமாக 1.5 பில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய 13 செயலில் உள்ள திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.