முகநூல் தளம் முழுவதும் "முட்டாள்கள்" நிறைந்துள்ளனர் எனவும், அது புத்திசாலிகள் விவாதிப்பதற்கான இடம் அல்ல எனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தொடர்ந்த…
முகநூல் தளம் முழுவதும் "முட்டாள்கள்" நிறைந்துள்ளனர் எனவும், அது புத்திசாலிகள் விவாதிப்பதற்கான இடம் அல்ல எனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தயாசிறி ஜயசேகர, அர்த்தமுள்ள விவாதங்களை நடத்துவதற்கான இடமாக முகநூலை தான் கருதவில்லை என்றும், அதனால் அந்த சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.நான் முகநூல் பயன்படுத்துவதில்லை; ஏனெனில் அது முட்டாள்களால் நிறைந்துள்ளது. புத்திசாலிகள் தங்களுக்குள் விவாதித்துக் கொள்ளும் களமாக அது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.அதனால்தான் நான் அங்கோ அல்லது அதைத் திரும்பிப் பார்க்கவோ கூட மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை குற்றவாளிகள், இனவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது ஊழல்வாதிகள் என முத்திரை குத்தி அவர்களின் நற்பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான கருத்துக்களின் போதே முகநூல் பற்றிய தனது விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சியினர் மீது ஒருமுறை இத்தகைய முத்திரைகள் குத்தப்பட்டுவிட்டால், அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்து தங்கள் அரசியல் பணிகளைத் தொடர்வது கடினமாகிவிடுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முகநூலை தான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதில்லை என்று தயாசிறி ஜெயசேகர கூறினாலும், அவரது பெயரிலான பொது முகநூல் பக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதில் அவரது அரசியல் செயல்பாடுகள், வீடியோக்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் தொடர்ந்து தற்போதும் பதிவேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

