காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பஸ் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த 62 வயதுடைய பெண்ணும், அவரது 12 வயது பேரனும் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியா…
காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பஸ் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த 62 வயதுடைய பெண்ணும், அவரது 12 வயது பேரனும் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, கட்டுகுருந்த பிரதான பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி மீண்டும் பயணத்தைத் தொடங்கியபோது, எதிரே வந்த முச்சக்கரவண்டி அதன் முன்பகுதியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து பஸ்ஸின் முன்புற கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்திருந்த நிலையில், விபத்தில் காயமடைந்த அனைவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பாட்டியும் பேரனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டியை செலுத்திய சிறுவனின் தாத்தா பலத்த காயங்களுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மற்றொரு பெண் லேசான காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
பேருவளை பகுதியில் நடைபெற்ற பொசன் வலயத்தை பார்வையிட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, விபத்து ஏற்பட்ட தருணத்தில் பஸ்ஸில் இருந்த ஒருவர் சாரதியின் அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பையை திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமும் பஸ்ஸின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதுடன், சந்தேகநபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

