இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் பராமரிப்பு இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் உத்தரவிட்டுள்ளது.South Asians & Diaspora இலங்கையில் பதிவு செய்யப்படா…

இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் பராமரிப்பு இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் உத்தரவிட்டுள்ளது.South Asians & Diaspora

இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் தொடர்பாக தற்போது விசேட கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை வெளியிட்ட பணிப்பாளர் கே. சதுர மிஹிதும், நாடு தழுவிய ரீதியில் இயங்கும் முதியோர் இல்லங்களின் அடிப்படை விபரங்களைத் திரட்டும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதுவரை தமது விபரங்களை வழங்காத இல்லங்களின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகத்தினர், தேசிய முதியோர் செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் விபரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க முடியும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் முதியோர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட நலன்புரித் திட்டங்களில் இந்த இல்லங்களை உள்வாங்குவதற்கு இப்பதிவு இன்றியமையாததாகும்.

முதியோர் இல்லங்கள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்துக்கும் மேற்பட்ட முதியவர்களைத் தங்கவைத்து அவர்களுக்குத் தங்குமிட பராமரிப்புச் சேவைகளை வழங்கும் இதுவரை பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் 311 முதியோர் இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அனைத்திற்கும் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது இல்லங்களைப் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், அந்த இல்லங்களின் நிர்வாகத்தினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.