நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் சம்பவம் தொடர்பில் தான் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சராக, இந்தச் சம்பவத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டும்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் சம்பவம் தொடர்பில் தான் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சராக, இந்தச் சம்பவத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திங்கட்கிழமை (6) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையில் தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், மனித உயிர்கள் இழக்கப்பட்டதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

"உயிரிழப்புகள் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

யார் மீதும் பழி சுமத்துவதை விட, உண்மைகளைக் கண்டறிவதிலும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதிலுமே தனது கவனம் இருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.